செய்திகள்

மலேசியாவை 3-1 என வீழ்த்தி தங்கம் வென்றது கலப்பு இந்திய பேட்மிண்டன் அணி

காமன்வெல்த் போட்டியில் கலப்பு இந்திய பேட்மிண்டன் அணி மலேசியாவை 3-1 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. #CWG2018 #GC2018

மாலை மலர்

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. கலப்பு பேட்மிண்டன் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா - மலேசியா அணிகள் பலப்ரீட்சை நடத்தின.

முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா ஜோடி மலேசியாவின் பெங் சூன் சான் - லியு யிங் கோஹ் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, 2-வது செட்டை 15-21 என இழந்தது. ஆனால் 3-வது செட்டை 21-15 எனக்கைப்பற்றியது.

2-வது ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கிதாம்பி மலேசியாவின் சாங் வெய் லீ-யை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-17, 21-14 என எளிதில் வெற்றி பெற்றார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றது.

ஐந்து ஆட்டத்தில் மூன்றை கைப்பற்றினால் தங்கம் வென்று விடலாம் என்ற நோக்கத்தில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி - சிராக் சந்திரசேகரர் ஷெட்டி ஜோடி ஷெம் கோஹ் - வீ கியோங் டான் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 15-21, 20-22 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் ஸ்கோர் 2-1 என இருந்தது.

4-வது செட்டில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் மலேசியாவின் சோனியா சியா-வை எதிர்கொண்டார். முதல் செட்டை சாய்னா 21-11 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 19-21 என போராடி இழந்தார். ஆனால் வெற்றி தீர்மானிக்கும் 3-வது செட்டில் சாய்னா அபாரமாக விளையாடி 21-9 எனக் கைப்பற்றினார். இதனால் இந்தியா 3-1 என வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இந்தியா 10 தங்க பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.