வியாபாரி உயிரிழப்பு 
செய்திகள்

திருவள்ளூரில் மாயமான வியாபாரி கோவில் குளத்தில் பிணமாக மீட்பு

திருவள்ளூரில் மாயமான வியாபாரி கோவில் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் பெருமாள் செட்டி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). இவர், கவரிங் நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி (40) என்ற மனைவியும், சாருலதா (15), விஜயலட்சுமி (14) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற செந்தில்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் இதுபற்றி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான செந்தில்குமாரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் மாயமான வியாபாரி செந்தில்குமார் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு, செந்தில்குமார் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.