பொள்ளாச்சி:
பொள்ளாச்சி ஆழியாறு அணைக்கு சுற்றுலா வரும் பயணிகள் படகு சவாரி செய்யும் நோக்கில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் ஆழியார் அணையில் படகு சவாரி செய்வதற்கு சுற்றுலா பயணிகளிடம் இருந்து கட்டணம் பெற்று படகுகளை இயக்கி வருகிறது.
இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இங்கு படகு ஓட்டுனராக பிரான்சிஸ்(64) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 13-ந் தேதி சிறிய படகு மூலம் சென்று ஆழியாறு அணையின் மைய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தேங்கிய மழை நீரை அகற்றி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி அணையில் விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி சத்தம் போட்டார். இதை பார்த்த சுற்றுலா பயணிகள் ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.
அப்போது அவர் நீரில் மூழ்கி விட்டார். பின்னர் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மாயமான பிரான்சிசை தேடி வருகின்றனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் மழை நேரத்தில் படகில் இருந்த தண்ணீரை அகற்ற வற்புறுத்தியதால் தான் பிரான்சிஸ் தண்ணீரில் மூழ்கி மாயமானார் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.