லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. அங்கு நேற்று 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தபோது ஓட்டு எந்திரங்களில் தில்லு முல்லு செய்திருப்பதாக பல இடங்களில் புகார்கள் எழுந்தன. ஒரு வாக்குச்சாவடியில் உள்ள ஓட்டு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்துக்கு ஓட்டு விழுந்தது.
எனவே அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே ஓட்டு எந்திரம் மாற்றப்பட்டு வேறு எந்திரம் மூலமாக ஓட்டுப்பதிவு நடந்தது.
நேற்று 2-வது கட்ட தேர்தல் நடந்தபோது, பல்லாயிரக்கணக்கானவர்களின் ஓட்டுகள் மாயமாகி இருந்தது. இதனால் பல இடங்களிலும் தேர்தல் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா மூத்த தலைவர் கல்ராஜ்மிஸ்ரா, உத்தரபிரதேச கேபினட் மந்திரி ரீட்டா பகுகுனாஜோசி ஆகியோரின் ஓட்டுக்களும் மாயமாகி இருந்தன.
லக்னோவில் 3 முறை மேயராக இருந்த தவ்குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் ஓட்டுகளும் வாக்காளர் பட்டியலில் இல்லை.
இது சம்மந்தமாக முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், உள்ளாட்சி தேர்தலில் பல்லாயிரக்கணக்கானோர் ஓட்டுக்களை காணவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுதான் டிஜிட்டல் இந்தியா என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.