செய்திகள்

முகவரிகள் மாயமானது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

அரசு இணைய தளத்தில் அமைச்சர்களின் தொடர்பு விபரங்கள் மாயமான விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மாலை மலர்

மதுரை:

மதுரை ஒத்தக்கடை அருகில் உள்ள வேளாண் கல்லூரியில் இன்று தேசிய வாழைத் திருவிழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, துரைக்கண்ணு, உதயகுமார் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர்.

விழா முடிந்ததும் அமைச்சர் செங்கோட்டைன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு குறித்து பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அழுத்தமும் கொடுத்துள்ளோம். விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என காத்திருக்கிறோம்.

தமிழகத்தில் அனைத்து பாடத்திட்டங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக சிறந்த வல்லுநர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் 3 வருடத்தில் அனைத்து வகுப்பு பாடத்திட்டங்கள் முற்றிலும் மாற்றி அமைக்கப்படும் என்றார்.

அப்போது நிருபர்கள், ஊழல் புகார்களை அரசின் இ.மெயிலுக்கு அனுப்புமாறு பொதுமக்களுக்கும், ரசிகர்களும் கமலஹாசன் தெரிவித்திருந்திருந்த நிலையில் அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் முகவரிகள், இ.மெயில் போன்ற விபரங்கள் நீக்கப்பட்டுள்ளதே? என்று கேட்டனர்.

அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், அது குறித்த விபரங்கள் எதுவும் எனக்கு தெரியாது. அப்படி அமைச்சர்களின் விபரங்கள் நீக்கப்பட்டு இருந்தால் முதல்- அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.