பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த நந்தியம் பாக்கம் அண்ணாநகரை சேர்ந்தவர் ஜெயவேல். நேற்று இரவு இவரது வீட்டில் மின்சாரம் இல்லை. இதனால் அவர் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள அவரது அண்ணன் வீட்டில் குடும்பத்துடன் தூங்கினார்.
இன்று காலை அவர் வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரம் ரொக்கம், ஒரு பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
அதே பகுதியில் 2-வது தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ். வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக உள்ளார். நேற்று காலை அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருக்கோலைவணம் சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் அந்த வீட்டிலும் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர்.
இதேபோல் 3-வது தெருவில் வசிக்கும் முகுந்தன் என்பவரது வீட்டின் பூட்டையும் மர்ம கும்பல் உடைத்தனர். சத்தம் கேட்டு அவர் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். கொள்ளையில் ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.