கைது 
செய்திகள்

மீஞ்சூர் அருகே பைனான்சியர் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது

மீஞ்சூர் அருகே பைனான்சியர் கொலையில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பொன்னேரி:

திருவொற்றியூர், ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் சக்கரை (வயது63). பைனான்சியர்.

நேற்று முன்தினம் இரவு அவர் மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் சக்கரை கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக திருவொற்றியூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

கைதான ஜெயக்குமார், சக்கரையிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்று இருந்தார். இதனை அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் தொகையை சக்கரை கேட்டபோது ஜெயக்குமாரிடம் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது சக்கரை, ஜெயக்குமாரின் மனைவி குறித்து தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஜெயக்குமார், சக்கரையை தீர்த்து கட்ட முடிவு செய்தார். சம்பவத்தன்று இரவு சக்கரையை நந்தியம்பாக்கம் அழைத்து வந்து ஜெயக்குமார் மது அருந்தினார். அப்போது போதையில் இருந்த சக்கரையை அவர் வெட்டி கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து ஜெயக்குமாரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.