செய்திகள்

ஆட்சி-கட்சியை காப்பாற்ற எந்த தியாகமும் செய்யத்தயார்: அமைச்சர்கள் பரபரப்பு பேச்சு

இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிக்கும். ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற எந்த தியாகமும் செய்வோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

மாலை மலர்

மதுரை:

மதுரை ஆவின் பால் பண்ணையில் ரூ.96 கோடி மதிப்பில் புதிய ஐஸ் கிரீம் தொழிற்சாலை மற்றும் நறுமணபால் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. ஆவின் தலைவர் தங்கம் வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் முன்னிலை வகித்தார். ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ் திட்ட அறிக்கை வாசித்தார்.

விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடு தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆட்சியையும், கட்சியையும் யாராலும் அசைக்க முடியாது.

கட்டுப்பாட்டோடு காத்திருக்கிறோம். உத்தரவு கிடைத்தால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் முறியடிப்போம். சிலர் எங்கள் கட்சிக்குள் நுழைந்து குழப்பம் விளைவிக்க பார்க்கிறார்கள். நாங்கள் எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம். இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிக்கும். ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற எந்த தியாகமும் செய்வோம் என்றார்.

அமைச்சர் உதயகுமார் பேசுகையில், தமிழகத்தில் வெண்மை புரட்சியை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா. ஆவின் பால் மட்டுமின்றி, ஐஸ்கிரீம், தயிர், மோர், பவுடர் போன்ற பல்வேறு உப பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். இந்த அரசை செயல்படாத அரசு என்று விமர்சிக்கிறார்கள்.

விவசாயிகளின் போராட்டம் என்ற பெயரில் கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறார்கள். கட்சி, ஆட்சியை காப்பாற்ற உயிரையும் தியாகம் செய்வோம்.

10 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கியது. இதில் தமிழகத்துக்கு அதிக நிதி பெறப்பட்டு உள்ளது.

4 ஆண்டுகள் நிலையான அரசையும், மெஜாரிட்டியுடனும் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு மக்கள் பணியாற்றும். நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு விரைவில் நல்ல நேரம் கூடி வருகிறது என்றார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ஜெயலலிதா நம்மோடு இல்லை. ஆனால் அவர் அறிவித்த திட்டத்தால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஜெயலலிதாவின் ஆட்சி 4 ஆண்டுகளுக்கு நீடிக்கும். தேர்தலில் கொடுத்த 55 வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகள் நிறை வேற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள 45 வாக்குறுதிகளையும் ஜெயலலிதா அரசு 4 ஆண்டு காலத்துக்குள் நிறைவேற்றும். அப்போதும் இந்த ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள். 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

தி.மு.க. ஆட்சியில் மக்கள் என்ன பாடுபாட்டார்கள் என தெரியும். ஆவின் நிறுவனம் செயல்படாமல் இருந்தது. தற்போது லாபத்தில் இயங்கி வருகிறது. பால் உற்பத்தியை பெருக்கி வெண்மை புரட்சி ஏற்பட்டுள்ளது. கட்சியையும், ஆட்சியையும் காப்போம். அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.

விழாவில், நிர்வாகிகள் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், கிரம்மர் சுரேஷ், பகுதி செயலாளர்கள் மாரிச்சாமி, ஜெயபால், ஜெயவேல், அண்ணாநகர் முருகன், கருப்பசாமி, முத்து இருளாண்டி, பரவை ராஜா, வினோத்குமார், ராஜீவ்காந்தி, அசோகன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், டால்பின் அசோக், கே.வி.கே. கண்ணன், பாஸ்கரன், முத்துகிருஷ்ணன், மிசா செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.