செய்திகள்

‘குட்கா’ பிரச்சினையை சட்ட ரீதியாக சந்திப்பேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்

குட்கா பிரச்சனையை நான் சட்டரீதியாக சந்திப்பேன், எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை விரைவில் நிரூபிப்பேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மாலை மலர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசலில் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடமானது கழகம் எதிர்கட்சியாக இருக்கும் போது, நான் குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட எந்த அரசு பதவியிலும் இல்லாதபோது 2007-ம் ஆண்டு தொழில் துவங்குவதற்காக நிலம் வாங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரதானமான தொழில் கல்குவாரி. இது சாதாரணமாக சாலை போடுவதற்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கும் தேவையான ஜல்லிக்கல் உற்பத்தி செய்யும் கிர‌ஷர் தொழிலாகும். இந்தத் தொழில் 2007-ம் ஆண்டு என் பெயரில் துவங்கப்பட்டது. இது சட்ட விதிகளுக்கு உட்பட்டு கனிம வள, சுற்றுச்சூழல், மாவட்ட நிர்வாகம் என அனைத்து துறைகளின் முறையான அனுமதி பெறப்பட்டு இயங்கி வருகிறது.

இதைபோலவே 120 புளு மெட்டல் நிறுவனங்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இயங்கி வருகின்றன. இதில் எங்கள் குடும்பத்தின் நிறுவனமும் ஒன்று. இதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முறையான விற்பனை வரி, வருமான வரி உள்ளிட்டவைகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

நான் அமைச்சராகப் பொறுப்பேற்ற உடன் இந்த குடும்ப நிறுவனங்கள் என் பெயரில் இயங்கக்கூடாது என்பதற்காக வங்கி வரவு, செலவு உள்ளிட்ட முழு நிர்வாகப் பொறுப்பையும் எனது தந்தை பெயருக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளேன். எனது தந்தை தான் இவற்றை நிர்வகித்து வருகிறார்.

பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும், சமையல்காரர் சுப்பையா என்று கூறுவது மிக, மிக வேதனைக்குரியது. சுப்பையா ஒரு தொழில் முனைவர், வருமான வரி கட்டுபவர், எங்கள் நிறுவனத்தில் சப்-கான்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார்.

மேலும், சுப்பையா என்ற பெயரில் எனக்கு சமையல்காரரோ, உதவியாளரோ இல்லை என்பதையும், வேறு எந்த மாற்று நபரின் (பினாமி) பெயரிலும் எங்கள் குடும்பத்தினர் தொழில் நடத்தவில்லை என்பதையும் தெளிவாக வலியுறுத்தி கூற விரும்புகின்றேன்.

ஏப்ரல் 7ம் தேதி எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் வருமான வரி சோதனை நடந்தது. தொடர்ந்து 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. 3 முறையும் நான் சட்டத்திற்கு உட்பட்ட குடிமகன் என்ற முறையில் காலதாமதம் இன்றி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்று முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளேன். அதில் நான் சட்ட ரீதியாக எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை விரைவில் நிரூபிப்பேன்.

தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அறிக்கை விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் செயல் வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது.

ஊழல் புகார் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. குட்கா பிரச்சனையில் சொல்லப்படும் மாதவராவ் என்பவர் யார் என்பது எனக்கு தெரியாது என்பதையும், இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதையும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புனையப்பட்ட குற்றச்சாட்டு என்பதையும் இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்பதையும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன்.

ஆதாரமற்ற குற்றாச்சாட்டுகளை அள்ளிவீசும் மு.க.ஸ்டாலின் குடும்பமும்தான் ஊழலின் ஊற்றுக்கண் என்பதை நாடறியும். இந்திய வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலான 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை முறைகேட்டில் ஈடுபட்ட குடும்பம்.

என்னைப் பொறுத்தவரையில் நான் எல்லாவற்றையும் பொறுமையாக அணுகி என் மீது எந்த தவறும் இல்லை என்பதை சட்ட ரீதியாக உறுதியாக மெய்ப்பிப்பேன்.

மு.க.ஸ்டாலின் பல ஆண்டுகள் வயதில் மூத்தவர். நான் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர் இல்லை என்றே நான் நம்புகின்றேன். இருப்பினும் அவர்களுக்கு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காலம் தனது கணக்கை சரியாக முடிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.