தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 
செய்திகள்

அரசு ஆஸ்பத்திரிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவமனைகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மாலை மலர்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் தினமும் 5 லட்சம் புற நோயாளிகள் சிகிச்சை பெற வந்து செல்கிறார்கள். 80 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் 15 ஆயிரம் பேர் சிகிச்சை பெற வருகிறார்கள்.

தமிழகத்தில் 108 ஆம்புலன்சு சேவையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஜிபிஆர்எஸ் வசதியுடன் 930 ஆம்புலன்சுகள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் மலைப் பகுதி, கடற்கரை பகுதிகளில் தனி ஆம்புலன்சுகள் பயன்படுத்தப்படுகிறது.

இனிவரும் காலங்களில் அவசர சிகிச்சை, பிரசவம், ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளி மற்றும் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கான சேவை என நவீன வசதிகளுடன் ஆம்புலன்சுகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது. இதில் மாநில அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் இதில் உறுதியாக இருந்து பணிகளை மேற்கொண்டுள்ளார்.

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி டீன் நெஞ்சு வலிக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளது அவரது தனிப்பட்ட விருப்பம். அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளுக்கும் வசதிகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் சேர விரும்புவர்கள் முதல்வரின் காப்பீட்டு திட்டம் மூலம் சேர்ந்து பயனடையலாம்.