சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பொன்முடி (தி.மு.க.) பேசியதாவது:-
தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் தற்போது ஐகோர்ட்டு இதற்கு தடை விதித்துள்ளது. எனவே தமிழக மாணவர்களின் நலன் கருதி இடஒதுக்கீட்டை பெற தடையை நீக்கி உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உறுப்பினர்கள் கருணாஸ், தனியரசு ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆயத்த பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை செய்து முடித்துள்ளது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் அரசு ஆணையை ரத்து செய்யக் கோரி ஏற்கெனவே 15-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். மூத்த வழக்கறிஞர் மூலம் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளித்தது.
எனவே உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு தடை விதிக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் மூலம் திறமையாக வாதம் செய்யப்பட்டது. இதை அரசும் கண்காணித்தது.
தற்போது உயர்நீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு தடை விதித்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். நமது உரிமை நிலை நாட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.