கண்காட்சியில் துணியால் தயாரிக்கப்பட்ட பொருட்களை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ். மணியன் பார்வையிட்டனர். 
செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடமாட்டோம்- அமைச்சர் வேலுமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடமாட்டோம் என்று கோவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். #CauveryIssue

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கோவை சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மேலாண்மை கல்லூரி ஆகியவை சார்பில் தொழில்நுட்ப ஜவுளி மைய தொடக்க விழா சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் இன்று நடந்தது. இதில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டனர். தொடர்ந்து விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியதாவது,

தமிழகம் ஜவுளித்துறையில் முதன்மை மாநிலமாக பயணித்து வருகிறது . ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம். தமிழ்நாடு கைத்தறி துறை சார்பில் தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றார்.

விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசும்போது,

ஜவுளி தொழில், தொழில் வளர்ச்சியில் முன்னோடியாகவும் கிராமப்புற மக்களுக்கு உதவியாகவும் உள்ளது. ஜவுளித்துறையில் , இளம் தொழில் முனைவோரின் பங்கு முக்கியமானதாக உள்ளது என்றார்.

தொடர்ந்து அமைச்சர் ஓ.எஸ். மணியன் நிருபர்களிடம் கூறியதாவது,


இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஜவுளித்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தொழில்நுட்ப ஜவுளி புத்தாக்க முயற்சியை தொடங்கி உள்ளதன் மூலம் 13 வகையான புதிய உற்பத்திகளை தொடங்க உள்ளது . இது தொழில் புரட்சியை ஏற்படுத்தும் என்றார். அவரிடம், குக்கர் சின்னம் தினகரனுக்கு ஒதுக்கி உள்ளது குறித்த கேள்விக்கு, நீதிமன்ற உத்தரவு மீது கருத்து கூற கூடாது என கூறினார்.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை கொடுத்து உள்ளது. சில குறைபாடுகள் இருந்தாலும் விரைவில் அமைக்க வேண்டும் என்பது தான் தங்களது கருத்து. விரைவில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என நம்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது,

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து எங்களது எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளனர் . இன்றும் முதல்வர் இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். தமிழகத்தின் உரிமையை மீட்டு எடுக்க தொடர்ந்து அ.தி.மு.க பாடுபட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடமாட்டோம் என்றார்.

SCROLL FOR NEXT