செய்திகள்

தமிழகத்தில் செயற்கை மழை திட்டம் குறித்து ஆய்வு - அமைச்சர் வேலுமணி

“தமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைக்கும் திட்டம் தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது” என உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கூறினார்.

மாலை மலர்

நெல்லை மாவட்டத்தில் நடந்த குடிநீர் பிரச்சினை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருகிறது. மழை பெய்யாததால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.430 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பஞ்சாயத்துகள், பேரூராட்சிகளில் சீராக குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருப்பவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்ட பிறகு அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. அதன்படி தமிழகத்தில் 10 ஆயிரத்து 600 வீடுகள் அகற்றப்பட்டு உள்ளன. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி ஓரிரு வாரங்களுக்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.