அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிய காட்சி. 
செய்திகள்

உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றியை தர வேண்டும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றியை தர வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

மாலை மலர்

மதுரை:

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் அனுப்பானடியில் நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல் பல்வேறு பொய் பிரசாரம் செய்தார்.

அந்த பொய் பிரசாரத்திற்கு முடிவுகட்டும் வகையில்தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

இந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் இந்த தேர்தல் 2021 தேர்தலுக்கு அச்சாரம் என்று கூறினார்.

அது மட்டுமல்லாமல் இந்த 2 இடத்தில் ஜெயித்தால் ஆட்சியை பிடிப்போம். அதேபோல் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினார். ஆனால் இன்றைக்கு மக்கள் அவருக்கு சரியான தீர்ப்பு தந்துள்ளனர்.

இன்றைக்கு தமிழ் நாட்டின் நலன் தான் முக்கியம் என்று முதலமைச்சர் செயல்பட்டார். அதற்கு நல்ல பரிசை மக்கள் வழங்கியுள்ளனர்.

இதேபோல் வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும் நல்ல பரிசை மக்கள் வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் அய்யப்பன், பஞ்சம்மாள், மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சவர்ணம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.