செய்திகள்

இரு அணிகளும் ஒத்துழைப்பதால் இணைப்பு தேதி விரைவில் வெளியாகும்: அமைச்சர் உதயகுமார்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும், ஓ.பி.எஸ். தலைமையிலான அணியும் இணைவதற்கு ஒத்துழைப்பதால் இணைப்பு தேதி விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. மாபெரும் சக்தியாக விளங்குகிறது. இந்த ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என்று மக்கள் வாழ்த்துகிறார்கள். அ.தி.மு.க. அரசை மக்கள் நன்றாக அறிந்து இருக்கிறார்கள். மக்கள் தேவைளை பூர்த்தி செய்து வருகிறது.

115 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் இந்த அரசு செயல்படுவதாகவும் பெருமான்மையை இழந்து விட்டதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவரது சொந்த கருத்தாகும்.

அ.தி.மு.க. அரசு மீது 2 நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்த 2 தீர்மானமும் வெற்றி பெற்றது. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தனி மெஜாரிட்டியுடன் இருக்கிறோம்.

இந்த ஆட்சி தொடர மக்களும், எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் விரும்புகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த அரசு தொடர தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்தி வருகிறார்.

தினகரன் கூட்டத்தில் பேசியவர்கள் ஜெயலலிதா ஆட்சி நிலைக்க வேண்டும் என்று கூறினார்கள். இந்த ஆட்சி 4 ஆண்டுகள் தொடரும்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும், ஓ.பி.எஸ். தலைமையிலான அணியும் இணைவதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். இணைவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இரு அணிகள் இணைப்பு குறித்து நல்ல செய்தியை மூத்த அமைச்சர்கள் அறிவிப்பார்கள். பிரிந்து செயல்படுவதால் நிர்வாக சீர்கேடு எதுவும் இல்லை. இரு அணிகளும் இணைந்தால் வலிமையாக செயல்பட முடியும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.