அமைச்சர் சீனிவாசன் 
செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுடன் இணைந்து நிவாரணம் வழங்கலாம்- அமைச்சர் சீனிவாசன்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுடன் இணைந்து நிவாரணம் வழங்கலாம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

திண்டுக்கல்:

கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பகுதி பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஜோஷிநிர்மல்குமார்,  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் மருதராஜ், வேடசந்தூர் எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம், துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்)  நளினி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க அரசு தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளிலும் வசித்து வரும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தாங்கள் வசித்து வரும் வீட்டிற்கு அருகாமையில்  வாங்கு வதற்கு ஏதுவாக மளிகை நிறுவனங்களில் வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டு. அவர்கள் மூலம் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்திடவும், நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு 2 மாதங்களுக்கான மருந்து, மாத்திரைகளை கூடுதலான வழங்கிடவும் மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது நிவாரணப்பொருட்கள் வழங்கிட விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார்களையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவித்திட்ட அலுவல ரையோ அணுகி அரசுடன் இணைந்து நிவாரணப் பொருட்களை வழங்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.