கோவை:
பெண்களுக்கு மானிய விலையில் ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் விழா கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். ஏ.கே. செல்வராஜ் எம்.பி., எம்.எல். ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண் குமார், அம்மன் அர்ச்சுனன், எட்டிமடை சண்முகம், கனகராஜ், கஸ்தூரி வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு முதற்கட்டமாக 145 பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டரை வழங்கி பேசியதாவது:-
கோவை மவாட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் 4,949 உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வானத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. மக்கள் தொகை சதவீத அடிப்படையில் நகர்புற பகுதிகளில் உள்ள 3746 உழைக்கும் மகளிருக்கும், ஊரக பகுதிகளிலுள்ள 1203 மகளிருக்கும் அம்மா இருசக்கர வாகனத்திற்கான மானியம் வழங்கப்பட உள்ளது.
ஆண்டுக்கு ஒரு லட்சம் இரு சக்கர வாகனங்கள் என்ற அளவில் 4 ஆண்டுகளில் 4 இலட்சம் இரு சக்கர வாகனங்களை வாங்க, உழைக்கும் மகளிருக்கு மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு ஆண்டிற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், மகளிரைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், நலிவுற்றோர், திருநங்கைகள் போன்றவர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இத்திட்டம், அம்மா பிறந்த நாளில் நடைபெற்ற விழாவில், பாரத பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டு, 1000 பயனாளிகளுக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. அனைத்து மகளிரும் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-
அத்திக்கடவு- அவினாசி திட்டம் 75 ஆண்டுகால கோரிக்கை ஆகும். இந்த திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் இருந்ததை விட தற்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்தி கேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ரூபன் சங்கர்ராஜ், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராஜ், மாநகராட்சி துணை கமஷனர் காந்திமதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. ராஜூ, மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் லாலிரோடு ராதா, தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி. ஜப்பார், ஜெயலலிதா பேரவை செயலாளர் நாசர், சிங்கை முத்து, தேயிலை தோட்ட தொழிற்சங்க செயலாளர் வால்பாறை அமீது, பகுதி செயலாளர்கள் வக்கீல் விமல் சோமு, செல்வக்குமார், சிங்கை வசந்தி, ஆதிநாராயணன், பழையூர் மோகன், வேணுகானம், சிங்கை பாலன், மணல் பாரதி, காட்டூர் செல்வராஜ், மு. சந்திரசேகர், பப்பாயா ராஜேஷ், ராஜ்குமார், சசிகுமார், உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #tamilnews