செய்திகள்

புதுவை துறைமுகம் ஆகஸ்டு மாதம் இயங்கும்: அமைச்சர் கந்தசாமி பேட்டி

புதுவை துறைமுகம் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் இயங்கும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

மாலை மலர்

புதுச்சேரி:

சென்னை துறைமுகத்துடன் புதுவை துறைமுகத்தை இயக்க புதுவை அரசு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் ஜூலை 1-ந்தேதி துறைமுகம் இயங்கும் என அறிவிப்பு தள்ளி போனது.

தற்போது முகத்துவாரம் தூர்வாரும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் துறைமுகத்தில் உள்ள குடோன்கள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை அமைச்சர் கந்தசாமி இன்று பார்வையிட்டார். துறைமுகத்தில் உள்ள குடோன்கள் முழுவதையும் அவர் பார்வையிட்டார். துறைமுக அதிகாரிகளிடம் தூர்வாரும் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

துறைமுகம் தூர்வாரும் பணியில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. துறைமுக கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இதனால் வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரம் புதுவை துறைமுகம் இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன், துறைமுக செயற்பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.