செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 1500 தலைமை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1500 தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan

மாலை மலர்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

அதன் பிறகு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வழக்கம் போல் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தான் கீழ் பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் முதன் முறையாக 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 1500 தலைமை ஆசிரியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும். இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.

ஆகவே விரைவில் 1500 தலைமை ஆசிரியர்கள் பணி நிரப்பப்படும்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம் பற்றிய ஆய்வு பணி நடந்து வருகிறது. விரைவில் இது நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பாண்டியாறு, புன்னம் புழா திட்டம் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சத்தியமங்கலம் வனப்பகுதி தாளவாடியில் பெய்யும் மழை தண்ணீர் எல்லாம் கர்நாடகத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

இதை தடுத்து தாளவாடியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.