செய்திகள்

பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி- அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை காளப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி 1917- ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்போது 100 வருடம் முடிந்து நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இப்பள்ளியில் 250 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நூற்றாண்டு விழாவை ஒட்டி பள்ளியின் முகப்பில் நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், எம்.ஆர். விஜய பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். நூற்றாண்டு விழா வளைவை அமைச்சர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு மாணவ -மாணவிகளின் ஓவிய கண்காட்சியை அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், எம்.ஆர். விஜய பாஸ்கர் பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர் .

விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது-

இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் நீண்ட நாள் கோரிக்கையான நூற்றாண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.


ஜெயலலிதா ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த ஆட்சியில் பள்ளி கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி கல்வி துறை அமைச்சர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

அனைத்து மாணவ- மாணவிகள் பயன் பெறும் வகையில் மடிக்கணிணி வழங்கி சிறப்பாக பயில வாய்ப்பு வழங்கப்பட்டது. கோவை மாநகரில் மெட்ரோ திட்டம் , மேம்பாலம் உட்பட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.

விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது-

எண்ணற்ற நலத்திட்டங்களை அமைச்சர் வேலுமணி செயல்படுத்தி வருகிறார்.

சிறப்பு அமலாக்கதுறை அமைச்சராக ஜெயலலிதா வேலுமணியை நியமித்தார். ஆற்றல் மிக்க அமைச்சராக இவர் செயல்பட்டு வருகிறார் . பள்ளி குழந்தைகள் எதிர்கால நலன் கருதி மிக சிறப்பாக பல நல்ல மாற்றங்களை செய்து வருகிறோம். பள்ளி குழந்தைகள் அறிவாற்றலை உயர்த்த ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். பள்ளி கூடுதல் கட்டிடம் கட்ட நிதி வழங்க அமைச்சர் அறிவித்தது மகிழ்ச்சி.

பள்ளிக்கு ஆடிட்டோரியம் கட்ட ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வின் கோரிக்கை நிறைவேற்றப்படும். நீட் தேர்வுக்கு பல மாநில பயிற்சியாளர்கள் சிறப்பாக பயிற்சி அளிக்க வழிவகை செய்யப்படும். அரசு பள்ளிக்கு அனைத்து வசதிகளும் அரசு செய்து தரும்.

வரலாறு படைக்கும் பாடத்திட்டம் அமையும் .சிபி.எஸ்.இ தரம் மிகுதியான பாடத்திட்டம் கொண்டு வரப்படும் .ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் தனியார் பள்ளியை முந்தும் வகையில் அமையும். 1 முதல் 12 வரை படிக்கும் மாணவர்கள் செலவு ஏதுமின்றி பயில வழி வகை செய்யப்படும். இந்த ஆண்டு கல்வித்துறைக்கு 26 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறைந்தது 1500 மாணவர்கள் தமிழகத்தில் இருந்து மருத்துவ கல்லூரிக்கு செல்வார்கள். அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் படிப்படியாக மாற்றப்படும். சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்துக்கு நிகரான பாடத்திட்டம் கொண்டு வரப்படும். அடுத்த இரண்டாம் ஆண்டு காலத்திற்குள் அனைத்து பாடதிட்டங்களும் மாற்றப்பட இருக்கிறது. மாணவர்களுக்கு சீருடை படிப்படியாக மாற்றி அமைக்கப்படும். பாடத்திட்டங்கள் மாற்றி அமைத்த பின்னர் அமெரிக்காவில் பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.