கோபி அருகே உள்ள நாமக்கல்பாளையத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் நடந்தது. முகாமில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மனுக்கள் பெற்று குறைகள் கேட்டார்.
அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிளஸ்-2 வகுப்பு முடியும் போதே மாணவ- மாணவிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய பாட திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பள்ளிகளுடன் இணைந்து 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இந்த குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் ‘‘மெய் நிகர்’’ வகுப்பறை அமைக்கப்படும்.
இந்தாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும் என 4 வகை சீருடைகள் வழங்கப்பட்டு உள்ளது.
கோபி அருகே உள்ள கொளப்பலூர் பகுதியில் ஜனவரி மாதம் ஜவுளி பூங்கா அமைக்க அடிக்கல் நடப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 7500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.