மதுரை:
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் விசாகன், தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் மதுரை மாநகராட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 50 சதவீத பங்களிப்புடன் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது.
மாட்டுத்தாவணி பழ சந்தையை மாற்றி அமைக்கும் பணி ரூ.12 கோடி மதிப் பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பெரியார் பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணி ரூ.162 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
வருகிற மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புராதன சின்னங்களை புனரமைக்கும் பணி ரூ.38 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் அருகில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் கட்டுமானப் பணி ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதத்துக்குள் (அக்டோபர்) பணிகளை முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.
வைகை ஆற்றங்கரையை மேம்படுத்தும் பணி ரூ.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
4 மாசி வீதிகளில் சிறப்பு சாலை அமைக்கும் பணி ரூ.53 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தமுக்கம் மைதானத்தில் கலாசார மையம் அமைக்கும் பணி ரூ.46 கோடியில் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்படுள்ளது.
வைகை வடகரை புதிதாக இணைக்கப்பட்ட வார்டு பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைப்பு ஏற்படுத்தும் பணி ரூ.291 கோடி மதிப்பீட்டில், வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வரும் மே மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை மாநகருக்கு சீரான குடிநீர் வழங்கும் பணி ரூ.77 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.
இப்பணிகள் தரத்துடன் உரிய காலத்தில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது நகரப் பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் மணியன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ். பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க் கெட்தலைவர் வில்லாபுரம் ராஜா, செயற் பொறியாளர்கள் ராஜேந்திரன், முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.