வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘மகா’ புயல் தற்போது லட்சத் தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் லட்சத்தீவு பகுதியில் வடமேற்காக நகரும்.
இன்று மதியம் ‘மகா’ புயல் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்துடன் நாங்கள் நேரடி தொடர்பில் இருக்கிறோம்.
அடுத்து வரும் 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம். சில இடங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
குமரிமுனை, மாலத்தீவு பகுதிகளில் அடுத்த 6 மணி நேரத்துக்கு மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகதத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இது மணிக்கு 80 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்தீவு பகுதியில் இன்று காலை மணிக்கு 75 முதல் 85 கி.மீ. வேகத்தில் சூறை காற்று வீசுகிறது. இது மணிக்கு 95 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.
இன்று மாலை தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 160 முதல் 170 கி.மீ. வேகத்தில் சூறைகாற்று வீசக்கூடும் என்றும், இது 190 கி.மீ. வேகம் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குமரிமுனை, மாலத்தீவு, லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
4-ந் தேதி வரை தென்கிழக்கு மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் உடனே கரை திரும்ப எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்ற 7 படகுகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்ற 5 படகுகள் தவிர மற்ற அனைத்து படகுகளிலும் மீனவர்கள் கரை திரும்பி விட்டனர். இந்த 12 படகுகளில் உள்ள மீனவர்களுக்கு புயல் நிலவரம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் திரும்பிக் கொண்டிருக்கிறார்ககள்.
புயல் நிலவரத்தை கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பேரிடர் குறித்த எச்சரிக்கைகள் பத்திரிகைகள், சமூகவலைதளங்கள், தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான நிவாரண முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை ஆகியவை கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, திருச்சி, காஞ்சீபுரம் மாவட்டங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
32 மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. எனவே மாணவ-மாணவிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மழை பெய்வதை பொறுத்து தேவையான விடுமுறைகளை அறிவிக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை காலங்களில் மாணவர்களின் அலைச்சலை தவிர்க்க உடனடியாக விடுமுறை விடுவதை முடிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.
கடந்த 24 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. 6 மாவட்டங்களில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.