செய்திகள்

கண்மாய் தூர்வாரும் பணியில் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: அமைச்சர் குற்றச்சாட்டு

கண்மாய் தூர்வாரும் பணியில் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாலை மலர்

மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை கண்மாயில் குடிமராமத்து பணிகள் இன்று தொடங்கியது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடு செயல்பட்டுவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனை பேணிகாக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கண்மாய்கள் தூர்வாரும் பணிக்காக முதல் கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் மதுரை மாவட்டத்தில் 73 கண்மாய்கள் குடிமராமத்து செய்யப்பட்டன.

தற்போது மேலும் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் சிவரக்கோட்டை கண்மாய் ரூ.30 லட்சம் செலவில் தூர்வாரப்படுகிறது.

தூர்வாரும் பணி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதை தாங்கிக்கொள்ள முடியாத மு.க.ஸ்டாலின் அவரும் குளங்களை மராமத்து செய்வது போன்று அரசியல் செய்கிறார். அவரது நடவடிக்கையை மக்கள் வேடிக்கையாக பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல். ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ், பெரியபுள்ளான், நீதிபதி ஆகியோர் கண்மாய்க்குள் இறங்கி மண்வெட்டியால் தூர் வாரும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.