செய்திகள்

பழனி மூலவர் சிலையில் 4 கிலோ தங்கம் மோசடி - அமைச்சரின் உறவினர் வாக்குமூலம்

பழனி கோவில் மூலவர் சிலை தயாரித்ததில் 4 கிலோ தங்கம் மோசடி செய்ததாக கைதான ராஜா தெரிவித்துள்ளார்.

பழனி:

பழனி கோவிலில் புதிய ஐம்பொன்சிலை உருவாக்க கடந்த 2004-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. 200 கிலோ எடையில், 5 அடி உயரத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு ஸ்தபதி முத்தையா தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் இதற்கான பணி நடந்தது. அவர் கற்சிலை மட்டுமே செய்யக்கூடியவர் என்பதால் வேறு ஒருவரை கொண்டு இந்த சிலையை தயார் செய்தார்.

அந்த சிலையில் வெள்ளி பயன்படுத்தப்படவே இல்லை. பஞ்சலோக சிலை என்று கூறப்படும் இதில் வெள்ளி கலக்கப்படவே இல்லை. சிலை அமைப்பிற்காக திருத்தணி முருகன் கோவிலில் இருந்து 10 கிலோ தங்கம் கடனாக வாங்கப்பட்டது. 22 கிலோ செம்பு உள்ளிட்ட உலோகங்களை அதிக அளவில் சேர்த்து 221 கிலோ எடையில் சிலை தயாரிக்கப்பட்டது.

இதில் 4.2 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதன் அப்போதைய மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும். தங்கம் போதிய அளவு கலக்காததால்தான் வடிவமைக்கப்பட்ட சில நாட்களிலேயே சிலையின் நிறம் மாறியது. கடந்த 14 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ள சிலை மூலம் ஒதுக்கிய நிதி மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.1.31 கோடி மோசடி செய்ததாக ஸ்தபதி முத்தையாவும் அப்போதை கோவில் இணை ஆணையர் ராஜாவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் விசாரணையின்போது முத்தையா தான் தெய்வ குற்றத்திற்கு ஆளாகி விட்டேன். இதனால் சிறைக்கு வந்துவிட்டேன். சிலை அமைப்பில் நடந்த மோசடியில் எனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த தகவல்களின் பேரில் போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஸ்தபதி முத்தையா மத்திய அரசால் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

SCROLL FOR NEXT