சென்னை:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை எழிலகத்தில் உள்ள மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தாக்குதலை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளின் கூட்டத்தை 5 முறை கூட்டி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
மேலும், வீடியோ கான்பரன்சிங் மூலம் 37 மாவட்ட கலெக்டர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். சுய தனிமை, சமூக இடைவெளி என்பதை முதல்-அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மக்கள் தானாக முன்வந்து இதை கடைபிடித்தால் 100 சதவீதம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். இது நம்மை நாமே காப்பாற்றுகிற முயற்சி. ஒட்டுமொத்தமாக நாட்டுக்கு செய்கிற சேவை. அதற்கான தருணம் இது.
காய்கறி கடைகளை விசாலமான இடங்களில் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அது பின்பற்றப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததிகளை காப்பாற்றுகிற ஒரு திட்டம். அரசு மேற்கொண்டுள்ள அத்தனை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். ஒரு சில இடங்களில் சிலர் அஜாக்கிரதையாக செயல்படுகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையை சேர்ந்த 30 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அத்தியாவசிய பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை. அதற்கான அடையாள அட்டை வாகனங்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்திடம் அதை பெற்றுக்கொள்ளலாம். காவல்துறைக்கும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கில் மக்களின் பங்களிப்பே முதன்மையானது. அரசு சார்பில் 9 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவர்கள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையில்லாமல் கிடைப்பதை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குனர் டி.ஜகந்நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.