அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நிருபர்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:-
கர்நாடகா தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு காவிரி மேலாண்மை அமைப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகின்றது. தேர்தலில் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படும் என்று கருதி 3 மாதம் காலம் கேட்டுள்ளனர்.
உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசின் காலக்கெடு மனுவை ஆரம்ப நிலையிலையே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மனு செய்ய உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஜெயலலிதா வழியில் இயங்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
தமிழகம் முழுவதிலும் நாளை (3-ந் தேதி) அ.தி.மு.க. சார்பில் அறவழியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது. வனிகர் சங்கங்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழக மக்களின் உணர்ச்சி போராட்டங்கள் மத்திய அரசின் கவனத் திற்கு கொண்டு செல்லும் வகையில்தான் உள்ளது. ராஜினாமா செய்வது என்பது என்னை பொறுத்தவரை உடன்பாடில்லை.
எம்.பி.க்கள் இருந்தால் தான் மத்திய ஆட்சியாளர் களிடம் தமிழக நலத் திட்டங்களை கேட்டு பெற முடியும். பதவியை ராஜினாமா செய்தால் யாரிடம் கேட்க முடியும். 6ம் தேதி வரை பாரளுமன்றம் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் நமது எம்.பி.க்கள் கடுமையான அழுத்தத்தை கொடுப்பார்கள்.
3- தேதி (நாளை) வணிகர் சங்கம் கடையை டப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில் 5-ந் தேதியும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது போராட்ட ஒற்றுமையை பாதிக்கும் வகையில் உள்ளது. போட்டிக்காக கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் யாரிடமும் ஆலோசனை கேட்டு இயங்க வேண்டிய அவசியம் இல்லை. சுயமாக முடிவெடுக்கும் திறமையானவர்.
ஜெயலலிதாவின் இடத்தில் பாடம் படித்த அவருக்கு, சொந்த விருப்பத்தின் பேரில்தான் பிரிந்த நிகழ்வுகளும் சேர்ந்த நிகழ்வுகளும் நடைபெற்றது. இன்று இ.பி.எஸ்., ஒ.பி.எஸ்.இணைந்த கரங்களாக செயல்பட்டு வருகின்றனர்.
கழகம், ஆட்சியும் நன்றாக செயல்பட்டு வருகின்றது. இது பிடிக்காமல் சிலர் பல கருத்துகளை சொல்வார்கள்.
ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து கமல்ஹாசனுக்கு எதுவும் தெரியாது. இத்தனை வருடமாக சும்மா இருந்துவிட்டு இப்போது பேசுகின்றார். சினிமாவில் வசனம் பேசுவது போன்று கமல்ஹாசன் கடுமையான பொய்களை மிகவும் சுலபமாக சொல்லி வருகிறார்.
அ.தி.மு.க. அரசு என்றும் மக்கள் பின்னால்தான் இருக்கும். மக்களுக்காக செயல்படும் அரசாக எடப்பாடி பழனிச்சாமி அரசு இயங்கி வருகிறது.
தி.மு.க. ஆட்சியில்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் இல்லை என்பதற்காகஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேசி வருகின்றனர்.
மக்கள் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக் கின்றனர். தமிழகத்திற்கு ஒரு எளிமையான, வலி மையான முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த அரசு, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில்தான் செயல்பட்டு வருகின்றது.
டெல்டா மாவட்டங்கள் வறண்டு போனால் தமிழகத்தில் உணவிற்கு பஞ்சம் ஏற்படும் என்று மக்கள் விழிப்புணர்வோடு உள்ளனர். ஏப்ரல்11-ந் தேதி தமிழகம் வரும் மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நேரடியாக வலியுறுத்துவோம்.
பிரதமருக்கு கண்டனம் தெரிவிப்பது, எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்வது என்ற கருத்தில் உடன் பாடில்லை.
தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று மத்திய அரசு கூறினால் அதையும் செய்ய தயாராகதான் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.