செய்திகள்

தனியார் பால் நிறுவனங்களை மூட நடவடிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு

தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்பட்டது உறுதியானால் அந்நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

தனியார் பாலில் ரசாயன கலப்படம் உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பான குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

இதையொட்டி தனியார் பால்பாக்கெட்டுகளை அதிகாரிகள் சாம்பிளாக எடுத்து மாதவரம் பால் பண்ணை ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்து பார்த்தனர். இதில் ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

தனியார் பால் நிறுவனத்தினர் பால் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக பல்வேறு ரசாயன வேதிப் பொருட்களை கலப்பதாக குற்றம்சாட்டி இருந்தேன்.

இதையொட்டி தனியார் பால் பாக்கெட்டுகளை மாதவரம் பால் பண்ணையில் ஆய்வுக்கு உட்படுத்தினோம். இதன் பரிசோதனை முடிவு தற்போது வெளிவந்துள்ளது.

காயம்பட்ட புண்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடு பிளிச்சிங் பவுடர் காஸ்டிங் சோடா இவைகள் தனியார் பாலில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆய்வகத்தில் இருந்து எனக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே அரசு இதன் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது.

பாலில் ரசாயனத்தை கலந்து பொதுமக்களின் உயிரோடு விளையாடும் தனியார் பால் கம்பெனிகளை மூடுவதற்கு அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. இதுபற்றி முதல்- அமைச்சருடன் கலந்து பேசி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாதவரம் பால் பண்ணை ஆய்வக கூடத்தில் பரிசோதனை முடிவு வந்ததுபோல், புனே, கிண்டியில் உள்ள ஆய்வகங்களில் நடைபெற்ற பரிசோதனை முடிவுகளையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் கலப்பட பாலை உபயோகப்படுத்துவது மூலம் கேன்சர், நீரழிவு நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பல்வேறு உடல் நலக்குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கலப்பட பாலை அனுமதிக்க முடியாது.

நான் தனியார் பால் கம்பெனி மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை கூறுவதாக யாரும் நினைக்க வேண்டாம். தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்கும் பொதுமக்கள் கூட தாங்கள் வைத்திருக்கும் பால் பாக்கெட்டுகளை பரிசோதித்து பார்த்தாலே என்னென்ன கலந்துள்ளது என்பது தெரிந்து விடும்.


ஆனால் தனியார் பால் நிறுவனத்தினர் கலப்படம் இல்லை என்று தொழில் மீது சத்தியம் செய்து மறுக்க முடியுமா? இதற்கு பதில் கூறாமல் பால் முகவர்களை வைத்து பேச வைக்கிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று நான் தனியார் பால் டின் வாங்கிப் பார்த்தேன். அதில் 30 நாட்கள் வரை கெடாது என்று எழுதப்பட்டுள்ளது.

சுத்தமான பால் 5 மணி நேரத்துக்கு பிறகு கெட்டு விடும். ஆனால் தனியார் பால் மட்டும் 15 நாள், 30 நாட்கள் கெடாது என்றால் என்ன அர்த்தம்?

பால் பற்றாக்குறையை போக்க சோயாபவுடர், கிழங்கு மாவு, குளுகோசை பாலில் கலப்பதை கூட ஜீரணித்து கொள்ளலாம். ஆனால் யூரியா போன்ற ரசாயன பொருட்களை கலந்து பொதுமக்களின் உயிரோடு ஏன் விளையாடுகிறார்கள்?

அதனால்தான் எச்சரிக்கை செய்கிறோம். நட வடிக்கை எடுக்க இருக்கிறோம். தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

எந்தெந்த தனியார் பாலில் என்னென்ன வேதிப்பொருட்கள் கலந்துள்ளது என்பது முழு ஆய்வறிக்கை அறிக்கை வந்ததும் மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

கலப்படம் செய்து வரும் தனியார் பாலை நிறுத்தினாலும் தட்டுப்பாடின்றி ஆவின் பாலை அரசால் வழங்க முடியும்.

ஆவின் நிறுவனத்தில் உபரியாக உள்ள பாலை பவுடராக்கி சேமித்து வைக்கிறோம். இனி அதையும் பவுடர் ஆக்காமல் மக்களுக்கு பாலாக வழங்குவோம்.