டென்மார்க் நாட்டை சேர்ந்த மாணவர்களுடன், அமைச்சர் க.பாண்டியராஜன் 
செய்திகள்

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு சிங்கப்பூர் தமிழர் தேர்வு: அமைச்சர் தகவல்

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு சிங்கப்பூர் தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

மாலை மலர்

சென்னை:

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 13 பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் 3 பள்ளி ஆசிரியர்கள், கல்வி மற்றும் கலாசார பரிமாற்ற சுற்றுப்பயணமாக சென்னை வந்துள்ளனர். சென்னை திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவ-மாணவியருடன் தங்கி உள்ள அவர்கள் மாமல்லபுரம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்டனர்.

நேற்று தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜனின் அலுவலகத்துக்கு வந்தனர். டென்மார்க் மாணவ, மாணவிகள் இருகரங்களையும் கூப்பி அமைச்சருக்கு தமிழில் வணக்கம் தெரிவித்தனர்.

தமிழக மாணவர்களிடம் தாங்கள் கற்றுக் கொண்ட, “கற்க கசடற கற்றபின்...” மற்றும் “எல்லா விளக்கும் விளக்கல்ல...” ஆகிய 2 திருக்குறள்களை தமிழில் தெளிவாக சொல்லிக் காட்டினர். அத்துடன் அந்த திருக்குறள்களின் ஆங்கில மொழியாக்கத்தையும் தெரிவித்தனர்.

அமைச்சர் பாண்டியராஜன் அவர்களிடம் டென்மார்க் நாட்டுக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள கலாசார, வரலாற்று தொடர்புகள் பற்றி விளக்கிக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் கோ.விஜயராகவன், தமிழ் வளர்ச்சித் துறை மொழி பெயர்ப்பு இயக்குனர் அருள், ஸ்ரீநிகேதன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியின் தாளாளர் விஷ்ணுசரன் பன்னீர்செல்வம் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமர்வுக்கு ரூ.40 கோடி செலுத்தப்பட வேண்டும். தமிழக அரசு கொடுத்துள்ள ரூ.10 கோடியையும் சேர்த்து மொத்தம் இதுவரை ரூ.36 கோடி கிடைத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வாழும் தமிழர்களும் நிதி அளித்துள்ளனர். ரூ.2 கோடிக்கு சிலர் மூலம் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.

மீதமுள்ள ரூ.2 கோடியில் இதுவரை ரூ.82 லட்சம் கிடைத்துள்ளது. மீதித்தொகை இன்னும் 2 வாரங்களுக்குள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு சிங்கப்பூர் தமிழர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். உலகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் ஆராய்ச்சிகள் குறித்து அறிய ஒரு ஆராய்ச்சி நுழைவாயில் அமைக்க தமிழ் வளர்ச்சி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான இணையதளம் தொடங்கப்படும்.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி ஆய்வு முடிவுகள் மத்திய தொல்லியல் துறையிடம் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் அந்த ஆய்வு முடிவுகள் பெறப்படும். தொல்லியல் துறைக்காக புதிய இணையதளம் தொடங்கப்பட்டு அவை வெளியிடப்படும்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள 2,500 புதிய தமிழ் வார்த்தைகள் அரசாணையாக வெளியிடப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மு.ஆறுமுகம் ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி நிதி உதவி அளித்திருக்கிறார். இதனை நன்றியோடு ஏற்றுக்கொள்கிறோம். தேவையான மொத்த தொகையையும் ஜூன் மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். ஆனால் இந்த மாத இறுதிக்குள் செலுத்திவிடுவோம் என்று கருதுகிறேன்.

அதன் அடிப்படையில் இந்த மாத இறுதிக்குள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.   #tamilnews