செய்திகள்

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தேன்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தேன் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

மாலை மலர்

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

கேள்வி- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது நேரில் சந்தித்தது தொடர்பாக அமைச்சர்கள் மாறுப்பட்ட கருத்துக்களை கூறுகிறார்களே? உங்கள் கருத்து என்ன?

பதில்- யார் யார் கருத்து கூறுகிறார்களோ, அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

கேள்வி- நீங்கள் ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை பார்த்தீர்களா?

பதில்- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி தலைவர், மற்றும் அங்கிருந்த சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் கூடவே இருந்து சிகிச்சை அளித்த குறிப்பிட்ட டாக்டர்களிடம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி கேட்டறிந்தேன்.

கேள்வி- டி.டி.வி. தினகரன் தற்போது முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை இம்சை அரசன், புலிகேசிகள் என பேசிவருகிறாரே? அதுப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்-அவர் பேசும் வார்த்தைகளில் இருந்து அவரது தரம் என்ன என்பதை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்.

கேள்வி- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என எதிர்கட்சிகள் கூறியிருக்கிறார்களே?

பதில்- ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்பு விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும் என்றார்கள். தற்போது முதல்-அமைச்சர் விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளார். சிறந்த அனுபவம் வாய்ந்த விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட நீதிபதியை நியமித்து உள்ளார். இதுவே மிகப்பெரிய வரவேற்கத்தக்கது.


கேள்வி- ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என முன்பு ஓ. பன்னீர்செல்வம் கூட கேட்டு இருந்தாரே?

பதில்- இப்போது அவர் கேட்டு இருக்கிறாரா?

கேள்வி- அமைச்சர்கள் வீடுகளில் ஐ.டி. ரெய்டு நடத்தியதின் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்- அதுப்பற்றி எனக்கு தெரியாது.

கேள்வி- ஜெனீவாவில் வைகோவை தாக்க நடந்த முயற்சிக்கு பிரதமரோ, முதல்-அமைச்சரோ ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே.

பதில்- சம்பவம் நடந்த உடனேயே அவருக்கு தேவையான பாதுகாப்புகள் அளிக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் நாங்கள் கண்டனம் தெரிவித்து இருப்போம்.

கேள்வி- ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைத்து கொண்டது போல டி.டி.வி.தினகரனுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?

பதில்- காலம் தான் பதில் சொல்லும்.