ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த மாட்டோம் என்று மாநில மந்திரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காஷ்மீர் மாநில பொதுப் பணித்துறை மந்திரி நயீம் அக்தர் ஸ்ரீநகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஆனால் காஷ்மீரில் அந்த வரி விதிப்பு முறையை அமல்படுத்த மாட்டோம்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு வணிகர்கள், பிரிவினை வாதிகள், எதிர்க் கட்சியினர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் கூறும் கருத்துக்களை அனைத்துக்கட்சி குழு கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு மேற் கொண்டு அறிக்கை தாக்கல் செய்யும். ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுடன் அது குறித்து விரிவான பேச்சு வார்த்தையும் கலந்தாலோசனையும் நடத்தப்படும்.
இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட மாட்டாது. அரசியல் அமைப்பு சட்டப் படி காஷ்மீருக்கு சில விதி விலக்குகள் அளிக்கப்பட்டு உள்ளன. எனவே ஜி.எஸ். டி.யை ஜூலை 1-ந்தேதியே காஷ்மீரில் அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. இதில் பிரிவினை வாதிகள் கருத்து தெரிவித்து வருவதை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஜி.எஸ். டி.யை காஷ்மீரில் அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீநகரில் லால்சவுக் பகுதியில் அந்த மாநில வர்த்தக அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜி.எஸ்.டி.க்கு பிரிவினைவாதிகளுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.