வாணியம்பாடி:
வாணியம்பாடி, ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால், ஆலங்காயம் பஸ் நிலையம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் மற்றும் சிறப்பு வசதிகளுடன் கூடிய புதிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சிகிச்சை மையத்தினை நேற்று நேரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ள சிகிச்சைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு உள்ள வசதிகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.
இதைத்தொடர்ந்து ஆலங்காயம் பேரூராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், விழிப்புணர்வு ஆட்டோவை கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர் கணேசன், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவி். சம்பத்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நகர செயலாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.