செய்திகள்

புளூவேல் விளையாட்டால் தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை: அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் புளூவேல்விளையாட்டு ஆரம்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது எந்த பாதிப்பும் இல்லை என சட்டசபையில் அமைச்சர் மணிகண்டன் கூறினார்.

சென்னை:

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க. உறுப்பினர் செம்மலை இணைய தளங்களில் சிலர் ஊடுருவி பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள். இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? இளைஞர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய இணைய தள ‘புளூவேல்’ விளையாட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அளித்த பதில் வருமாறு:-

“புரட்சித் தலைவி முதல்-அமைச்சராக இருக்கும் போதே இணைய தளங்களை பாதுகாக்க ‘இ-செக்கியூரிட்டி’ வசதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான இணைய தள பாதுகாப்பு வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக ஒரு உயர் மட்ட தொழில் நுட்ப குழு அமைக்கப்பட்டு அறிவுரை வழங்கி வருகிறது. 24 மணி நேர சைபர் செக்கியூரிட்டி கண்காணிப்பும் கொடுக்கப்படுகிறது.

புளூவேல் விளையாட்டு, சர்வர் ரஷியாவில் உருவாக்கப்பட்டது. இதை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக இதன் தாக்கம் தற்போது இல்லை. தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் இந்த விளையாட்டு ஆரம்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #TamilNews

SCROLL FOR NEXT