செய்திகள்

உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும்- அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். #localbodyelections

மாலை மலர்

விருதுநகர்:

விருதுநகரில் அ.தி.மு.க. மாவட்ட மகளிரணி சார்பில் மகளிர் தினவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் விஜய குமார் தலைமை தாங்கினார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

மகளிர் தினவிழாவை கொண்டாடும் தகுதி அ.தி.மு.க.விற்கு மட்டுமே உண்டு. பெண்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகளை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா செயல்படுத்தினர்.

மகளிர் காவல் நிலையங்கள், தாலிக்கு தங்கம், விலையில்லா ஆடு, மாடுகள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, திருமண உதவித்தொகை உட்பட பல்வேறு சரித்திர திட்டங்களை எம்.ஜிஆர். ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் செயல்படுத்தினர். பெண்களை மதிக்கின்ற தலைவராக எம்.ஜி.ஆர். வாழ்ந்து காண்பித்தார்.

இந்த இயக்கம் பெண்கள் முன்னேற்றத்திற்காகவே தொடங்கப்பட்டது. ஜெயலலிதாவின் கனவு திட்டமான பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஈ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பெண்கள் நலனுக்காக பாடுபடும் இந்த ஆட்சிக்கு பெண்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். உள்ளாட்சியிலும் நல்லாட்சியை அ.தி.மு.க.தான் அமைக்கும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் மக்கள் சக்தியோடு அ.தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும். இரட்டை இலை சின்னம் இருக்கும்வரை அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

இந்த இயக்கம் அழிந்து விடும் என்று சிலர் கூடி பேசுவார்கள். சேர்ந்து பேசுவார்கள். கடைசியில் கலைந்து காணாமல் போய் விடுவார்கள். ஆனால் நாங்கள் கூடி பேசுவோம், சேர்ந்து பணியாற்றுவோம் வெற்றிபெறுவோம். கோட் டையை ஆள்வோம்.

இவ்வாறு அவர் பேசினார். #localbodyelections #tamilnews