செய்திகள்

ஜெயலலிதா படம் திறக்க எதிர்ப்பு: இளங்கோவன் கருத்துக்கு யாரும் கவலைப்படப் போவதில்லை- அமைச்சர் கருப்பண்ணன்

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்கக் கூடாது என்று இளங்கோவன் கூறியுள்ள கருத்துக்கு யாரும் கவலைப்படப்போவதில்லை என ஈரோட்டில் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கூறியுள்ளார்.

மாலை மலர்

ஈரோட்டில் சுற்றுச்சுழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகம் தினம் தோறும் ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காகவும், தன்னை பற்றிய செய்தி தினமும் வர வேண்டும் என்பதற்காகவும் ஏதேதோ பேசி வருகிறார்.

தமிழகத்தில் தற்போது வறட்சி, தண்ணீர் பிரச்சனைகள் உள்ளது. இதை பற்றி அவர் கேள்வி கேட்பதில்லை. தமிழகத்தில் அமைதியாக இருக்கும் மக்களிடம் அவர் போராட்டத்தை தூண்டி விடுகிறார்.

ஈரோடு, பவானி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சாய கழிவு நீர் குழாய் மூலம் கலப்பது குறித்து தகவல் கிடைத்தால் நான் நேரிடையாக அந்த இடத்துக்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பேன்.

ஈரோடு சூளையில் சாயம் மற்றும் தோல் கழிவுகளை சுத்திகரிக்கும் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஒரு வாரம் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


‘‘ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்கக் கூடாது என்று கூறியுள்ளரே என்று கேட்டதற்கு, ‘‘ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தமிழக மக்கள் தலைவராகவே ஏற்று கொள்ளவில்லை. எனவே அவரது கருத்துகள் குறித்து யாரும் கவலைப்படபோவது இல்லை’’ என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறினார்.