செய்திகள்

சிலிப்பர் செல்கள் என யாரும் எங்கள் அணியில் இல்லை: கடம்பூர் ராஜூ

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒற்றுமையாக உள்ளோம், சிலிப்பர் செல்கள் என யாரும் எங்கள் அணியில் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தினகரனை நம்பி சென்றவர்கள் தற்போது பதவியை இழந்து உள்ளது தான் மிச்சம். கழக கட்டுப்பாட்டை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் கொறடா உத்தரவிட்டால் அவர்கள் பதவி விலக நேரிடும். சட்டமன்ற மரபுபடி 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதில் எந்த தவறும் இல்லை.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து மு.க.ஸ்டாலின் ஜனநாயக படுகொலை என கூறியுள்ளார். தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை சட்டமன்றத்திலேயே அவதூறாக பேசியுள்ளனர். எனவே மு.க.ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து கருத்து கூற எந்தவித தகுதியும் கிடையாது.

தினகரன் அணிக்கு சென்ற 18 எம்.எல்.ஏ.க்களை தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒற்றுமையாக உள்ளோம். எங்களிடம் ‘சிலிப்பர் செல்’ எம்.எல்.ஏ.க்கள் கிடையாது. சென்னையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், பொதுக்குழு கூட்டம் என அனைத்திலும் அவர்கள் கலந்து கொண்டனர்.

அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். அம்மா ஆட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் நாங்கள் வெற்றி பெறுவோம். இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.