ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தில் இன்று நடை பெற்ற சிறப்பு பூஜையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். அவருக்கு மாலை அணிவித்து மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குட்கா-பான்பராக் விவகாரம் தொடர்பாக, குற்றச்சாட்டு உள்ளவர் டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டு உள்ளாரே என கேள்வி எழுந்துள்ளது.
இந்த விஷயத்தில் டி.ஜி.பி. மீது வழக்கு எதுவும் பதியவில்லை. எதிர்க்கட்சிகளும், சிலரும் வாய்மொழியாகத்தான் புகார் கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக முதல்- அமைச்சர் தெளிவாக விளக்கம் தந்துள்ளார். எனவே இது தொடர்பாக எந்த தவறும் நிகழவில்லை.
தமிழகத்தில், எனக்கு பின்னும், அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடைபெறும் என்று ஜெயலலிதா முன்பே கூறி இருந்தார். அதன்படி தற்போது சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதனால் தான் தேர்தல் நடத்த முடிய வில்லை. எங்களுக்கு தேர்தலை கண்டு பயம் இல்லை.
அ.தி.மு.க. பிளவுபட்டு இருப்பதாக பலரும் கூறுகின்றனர். இந்த விரிசலால் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து எதுவும் இல்லை. விரிசல் சீராகி விரைவில் அனைவரும் ஒன்றுபடுவோம்.
மதுக்கடைக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் துணை சூப்பிரண் டுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டதில் தவறு ஏதும் இல்லை. அவர் மீது துறை ரீதியாக எந்த புகாரும் இல்லாததால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பாக சமூகவலை தளங்களும், எதிர்க்கட்சிகளும் தான் குறை கூறி வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.