தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 109-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சிதம்பரநகரில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பேசியதாவது:-
தூத்துக்குடி நான்காவது பைப் லைன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். நவம்பர் 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறுகின்ற நூற்றாண்டு விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு தகுதி படைத்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான். தமிழக வரலாற்றில் மாண்புமிகு என்ற அடையாளத்துடன் மறைந்தவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மட்டுமே. கருணாநிதி இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியவில்லை. வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதிக்குள் இரட்டை இல்லை சின்னம் எங்களுக்கு கிடைக்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
போகாத கட்சி இல்லை என்ற நிலையில் உள்ள நாஞ்சில் சம்பத் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்க அவர் என்ன சட்ட நிபுணரா?. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் இருந்து நல்ல தீர்ப்பு விரைவில் வரும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கடைசி வரை போராடியது.
தனது படம் வெளிவராததால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என பேசிய கமல்ஹாசனை ஜெயலலிதா அழைத்து பேசி அவரது படத்தை வெளிவர உதவி செய்தார். ஆனால் அவர் இன்று நன்றி மறந்து தமிழக அரசை அடிக்கடி விமர்சித்து வருகிறார். அவரை பொருட்டாக நினைக்க வேண்டியதில்லை.