காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அழைத்து ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது, அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லி செல்வது குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி பிரதமரை வலியுறுத்துவது குறித்தும் பேசப்பட்டது.
இந்த சந்திப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் பேசும்போது, காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையிலான அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க பிரதமர் மறுத்திருப்பதாக கூறினார்.
‘நீர்வளத்துறை அமைச்சரை முதலில் சந்திக்கும்படி பிரதமர் கூறியதாக முதலமைச்சர் எங்களிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக மார்ச் 8-ம் தேதி சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் தெரிவித்தோம்’ என்றார் ஸ்டாலின்.
தமிழக தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக வெளியான தகவல் வேகமாக பரவிய நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
காவிரிக்காக கருத்து வேறுபாடுகளை மறந்து, அனைத்துக்கட்சி கூடி தீர்மானம் நிறைவேற்றினோம். பின்னர் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. பிரதமரை சந்திக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால், முதலமைச்சர் தலைமையிலான குழுவை சந்திக்க பிரதமர் மறுக்கவில்லை. நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு சந்திக்கலாம் என பிரதமர் கூறியிருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்