செய்திகள்

கமல் அரசியலுக்கு வருவதாக ‘பாவலா’ காட்ட கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

நடிகர் கமல் அரசியலுக்கு வருவேன், வருவேன் என்று பாவலா காட்டக் கூடாது. வந்து பார்க்கட்டும். அதன்பிறகு தான் அரசியல் புரியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மாலை மலர்

சென்னை:

அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் கமல் சிறந்த நடிகர்தான், அதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் அரசியலுக்கு வருவது சாதாரணமானதல்ல. அரசியல் என்பது முள்படுக்கை போன்றது. அரசியலுக்கு வந்தால்தான் அதன் கஷ்டம் தெரியும்.

அரசியலுக்கு வருவேன், வருவேன் என்று பாவலா காட்டக் கூடாது. வந்து பார்க்கட்டும். அதன்பிறகு தான் அரசியல் புரியும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்கள் திடீரென்று அரசியலுக்கு வரவில்லை. ஒடுக்கப்பட்டவர்களுக்கும், நலிந்தவர்களுக்கும் குரல் கொடுத்து, மக்கள் அங்கீகாரம் கொடுத்த பிறகே கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தார்கள். அதிகமுறை ஆண்ட கட்சி என்ற பெருமை அ.தி.மு.க.வுக்கு உண்டு.

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளான காவிரி, முல்லைப் பெரியாறு வி‌ஷயங்களில் வாய் திறந்தது உண்டா? சுனாமி, பெரு வெள்ளங்கள் சூழ்ந்தபோது ஏதாவது செய்தது உண்டா? தி.மு.க. ஆட்சியின்போது தமிழகத்தின் உரிமைகள் தாரை வார்க்கப்பட்டதே, அப்போது உரிமைக்கு குரல் கொடுத்தாரா?

இந்தி எதிர்ப்பு காலத்திலேயே அரசியலுக்கு வந்து விட்டடதாக கூறுகிறார். அப்படியானால் 1976-ல் ஊழலுக்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது தெரியுமா?

அது ஏன் 2 ஜி ஊழலால் நாட்டுக்கே தலைகுனிவு ஏற்பட்டதே, அப்போது இந்த ஆவேசமும், ஆதங்கமும் வரவில்லையே ஏன்?

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.