செய்திகள்

தொழில் வளர்ச்சியில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை: அமைச்சர் தகவல்

தொழில் வளர்ச்சியில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது என்று சட்டசபையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சட்டசபையில் இன்று மு.க.ஸ்டாலின் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மாநிலங்களில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடந்துள்ளது. இதில் பேசிய முதன்மை அதிகாரி புதிய தொழிற்சாலைகள் அமைவதற்கான மாநிலங்களில் தமிழ்நாடு கடைசி இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே தொழில் தொடங்க ஏற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2023 தொலை நோக்கு திட்டத்துக்காக அறிவித்த அறிவிப்புகள் முறைப்படி செயல்படுத்தப்பட வில்லை. எனவே தமிழகத்தில் புதிய தொழில்கள் வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

அமைச்சர் எம்.சி. சம்பத்:- தமிழ்நாடு தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 2001 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் 30 ஆயிரத்து 848 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் அதன் பிறகு 6 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை ஈர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொழில் முதலீட்டில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் இருக்கிறது.

தொழில் வளர்ச்சியில் 9.2 சதவீதம் அதிகரித்து நாம் 2-வது இடத்தில் இருக்கிறோம். மின்னணு பொருள் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருக்கிறோம். சிறு குறு தொழில்களில் நாம் முதல் இடத்தில் இருக்கிறோம்.

நடப்பு ஆண்டு ரூ.19 ஆயிரத்து 33 கோடி முதலீடு வர இருக்கிறது. இதுபோன்று தொடர்ந்து தொழில் துறையில் தமிழகம் முன்னணி இடத்தை வகிக்கிறது.

மு.க.ஸ்டாலின்:- டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் அதன் முதன்மை அதிகாரி தமிழகம் பற்றி கூறியதற்கு அமைச்சர் விளக்கம் அளிக்கவில்லை.

அமைச்சர் எம்.சி.சம்பத்:- 15675 தொழிற்சாலைகள் உள்ளன. அனைத்தும் சிறப்பாக செயல்படுகின்றன. புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. தொடர்ந்து நமது மாநிலம் முன்னணியில் இருக்கிறது.

அமைச்சர் தங்கமணி:- அங்கு தெரிவிக்கப்பட்ட தகவல் தவறானது. நமது மாநிலம் தொழில் துறையில் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.