தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது சொந்த நிதியிலிருந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு நிலவேம்புகுடிநீர் வழங்குவதற்காக 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 கேன்கள் மற்றும் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 கேன்கள் என மொத்தம் 20 கேன்களை வழங்கினார். இதனை கலெக்டர் விவேகானந்தன் முன்னிலையில் சித்தா உதவி டாக்டர் தனசேகரனிடம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விவேகானந்தன் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் தர்மபுரி நகராட்சி ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு 15 வாகனங்கள் மூலம் நிலவேம்புகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொசு ஒழிப்புபணிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தினமும் சுமார் 15 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.
உயர்கல்வித்துறை அமைச்சர் வழங்கியுள்ள 20 பிளாஸ்க்குகள் (கேன்கள்) மூலம் கூடுதலாக பொதுமக்களுக்கு நிலவேம்புகுடிநீர் வழங்கப்படும். தர்மபுரி மாவட்டத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரிகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுகாதார பராமரிப்பு குறித்தும், டெங்கு கொசுக்கள் உற்பத்தி உள்ளதா? என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் கொசு உற்பத்தியை தடுக்காத தனியார் ஆஸ்பத்திரிகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் மற்றும் உணவகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக 266 பேருக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.