மதுரை:
மறைந்த முதல்-அமைச் சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரை வண்டியூர் பூங்காவில் மரக் கன்று நடும் விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரை வண்டியூர் பூங்காவில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
குரங்கணி காட்டுத்தீ பற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ரா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
அ.தி.மு.க. எம்.பி.க்கள் கடந்த 10 நாட்களாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். வருகிற 30-ந்தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நானும் இருக்கிறேன் என்பதை காண்பிப்பதற்காக டி.டி.வி. தினகரன் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தி வருகிறார்.
காவிரி பிரச்சினை வேறு, நீட் தேர்வு பிரச்சினை வேறு. நீட் தேர்வு பிரச்சினை தமிழகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ் மக்களின் உரிமைகளை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம். மத்திய அரசோடு ஒத்துபோனால்தான் மாநில அரசுக்கு நிதி கிடைக் கும் என்பதற்காக ஒத்துப்போகிறோம்.
அதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு ஜால்ரா போடுகிறது என்பது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்து வமனை அமைப்பது குறித்து முதல்-அமைச்சர் சில கருத்துக்களை கூறி இருக்கிறார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு வந்தாலும் எங்களுக்கு சந்தோசம்தான்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்தும், அதற்கான அடிப்படை வசதிகள் குறித்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. அதன் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews