பழனி:
பழனி பகுதியில் உள்ள பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி அணைகளில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி என்பது முன்னதாக அறிந்த ஒன்றுதான். இதேபோல் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அதிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இடைத்தேர்தல் வெற்றிக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் பங்களிப்பும் உள்ளது. இது வரவேற்கதக்கதுதான். மேலும் மத்தியிலும் தமிழக அரசு சுமூக உறவுடன் தான் உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல் உள்பட 6 இடங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இதேபோல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அ.ம.மு.க. பிரமுகர் புகழேந்தி சந்தித்துள்ளார். மேலும் வெகுவிரைவில் நல்ல முடிவை பார்க்கலாம். பழனி மலையடி வார பகுதியில் யானைகள் நடமாட்டம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, யானைகள் குடியிருப்பு மற்றும் தோட்டங்களுக்குள் புகாமல் தடுக்க அகழிகள் வெட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. எனவே யானைகளை விரட்ட போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.