செய்திகள்

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி நல்ல செய்தி வரும்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு குறித்து 7 மாதங்கள் பேச்சு நடந்து வருகிறது. நல்ல செய்தி, நல்ல நாள் விரைவில் வரும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

மாலை மலர்

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் வருகிற 2-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதற்கான கால்கோல் நடும் விழா இன்று நடந்தது.

இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், பெஞ்சமின், எம்.எல்.ஏ.க்கள் பலராமன், விஜயகுமார், அலெக்சாண்டர், கலெக்டர் சுந்தரவல்லி, போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த பொது மக்களிடம் இருந்து மனுக்கள், கோரிக்கைகள் வருகின்றன. இதனால் உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்படும்.

அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு குறித்து 7 மாதங்கள் பேச்சு நடந்து வருகிறது. நல்ல செய்தி, நல்ல நாள் விரைவில் வரும் என்றார்.

ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளாரே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில் கூறுகையில், “ஓ.பி.எஸ். அணியில் உள்ள பாண்டியராஜன் நீதிபதி மூலம் நடக்கும் விசாரணையை வரவேற்றுள்ளார்” என்றார்.