திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். 101-வது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபின்பும் அவரது வழியில் ஆட்சி தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தல் நடிகர்கள் சிலர் ஆட்சியை பிடிக்கலாம் என கனவு காண்கின்றனர். ஆனால் எம்.ஜி.ஆரை தவிர வேறு எந்த நடிகர்களும் தமிழகத்தை ஆள முடியாது. அ.தி.மு.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க.தான். இதன் பினாமியாக சிலர் செயல்பட்டு 18 எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆட்சியை கலைக்க முயற்சிக்கின்றனர். இது ஒரு காலம் நடக்காது.
தனி மனிதன் அ.தி.மு.க.வை கைப்பற்ற முடியாது. தி.மு.க. உள்பட எதிர்கட்சிகள் இந்த ஆட்சியில் ஊழல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் உள்பட யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை.
ஆர்.கே.நகர் தேர்தலில் தற்போது நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் 20 ரூபாய் டோக்கன் பெற்ற பலருக்கு பணம் கிடைக்கவில்லை. இது திருவிழாவில் சிறு குழந்தைகளை பொம்மையை காட்டி ஏமாற்றுவது போல் உள்ளது.
தற்போது பஸ் கட்டணம் உயர்ந்து விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் குறைவே.
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் விவேகம் இல்லாத அரசியல்வாதி. சட்டபேரவையில் ஆக்கப்பூர்வமான கேள்வியை கேட்காமல் பேசி வருகிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக பல கோடி விரையம் செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் தி.மு.க. ஆட்சியில் ரூ.1000 கோடிவரை தமிழ்செம்மொழி மாநாட்டிற்கு விரையம் செய்தனர்.
தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மூலம் பல ஏழை எளிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் முத்தலாக் விவகாரத்தில் ஆண்களுக்கு சிறை என்பதையும், ஹஜ் பயணத்தில் மானியம் ரத்து செய்யப்பட்டதற்கும் தமிழக அரசு எதிர்த்துள்ளது. யாருக்கும் பணிந்து போகவில்லை.
தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க.வை தவிர எந்த பெரிய கட்சியும் இல்லை. எனவே மக்கள் ஆதரவுடன் இன்னும் பல ஆண்டுகள் அ.தி.மு.க.வே ஆட்சி செய்யும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #TamilNews