திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில் மேதின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னத்துக்கு 2 முறை சோதனை வந்தபோது அதனை வெற்றிகரமாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மீட்டெடுத்தனர். 1972-ம் ஆண்டு கட்சி உருவான பின் முதன்முதலாக திண்டுக்கல்லில் நடந்த மக்களவை தேர்தலில் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை மக்கள் தந்தனர்.
1980-ம் ஆண்டு இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. பாராளுமன்ற தேர்தலை சந்தித்தது. அப்போது தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. அதன்பிறகு இரட்டை இலை முடிவுக்கு வந்து விட்டதாக எதிர்கட்சியினரால் விஷம பிரசாரம் செய்யப்பட்டது.
ஆனால் எம்.ஜி.ஆர். அதனை பொய்யாக்கி அ.தி.மு.க.வை அதன் பிறகு வந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற செய்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஏற்பட்ட சோதனையான காலகட்டத்திலும் ஜெயலலிதா போராடி இரட்டை இலையையும் கட்சியையும் மீட்டெடுத்தார். அதன்பிறகு தற்போது இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் ஆர்.கே.நகரில் இந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையமும் சின்னத்தை முடக்கி அறிவிப்பு வெளியிட்டவுடன் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். எந்த ஒரு அ.தி.மு.க. தொண்டனும் இரட்டை இலை முடக்கப்படுவதை விருப்பமாட்டான். அ.தி.மு.க. தொண்டனுக்கு உள்ள உணர்வுகூட அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இவர் தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் பினாமி ஆவார். அதனால்தான் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாமல்இருந்தது.
இருந்தபோதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்து கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அவரது எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்து வருகிறார். பதவி ஏற்ற உடனே முத்தான 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டு சாமானிய மற்றும் ஏழை மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
அ.தி.மு.க.வின் ஆட்சி 4 ஆண்டுகளிலும் சிறப்பாக நடைபெறும். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் நம்மிடம் இருப்பதால் ஆட்சியையோ, கட்சியையோ ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.