அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் ஒரு அணியினரும், டி.டி.வி தினகரன் தலைமையில் ஒரு அணியினரும் செயல்பட்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை நாடினர்.
இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏழு கட்டமாக நடைபெற்று வந்த விசாரணையில், இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் சில முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு இறுதி வாதங்கள் வைக்கப்பட்டன. இரு தரப்பினரின் வாதங்களை கேட்டறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.