செய்திகள்

தனியார் பாலில் கலப்படம் என்று அமைச்சரே புகார் கூறுவதா?: பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

கலப்பட பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தனியார் பால் அருந்துவதை பொதுமக்கள் யோசிக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னு சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த மே முதல் வாரத்தில் ஈரோட்டிலும், நேற்று திருவள்ளூர் மாவட்டத்தின் காக்களூரிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்படம் செய்கின்றன. அதனால் தான் தனியார் பால் நிறுவனங்களின் பால் கெட்டுப் போவதில்லை. எனவே பொது மக்கள் தனியார் பால் அருந்துவதை யோசிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

பாலில் கலப்படம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் கலப்பட பால் நிறுவனங்களை கண்டறிந்து அவர்கள் மீது ஆயுள் தண்டனை விதிக்கின்ற வகையில் அனைத்து மாநில அரசுகளும் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முதல்வர் தனிப் பிரிவிலும் மற்றும் தமிழக பால்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பால்வளத்துறைச் செயலாளர் ஆகியோருக்கும் எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து மனு அளித்தோம்.

ஆனால் இதுவரை கலப்பட பால் நிறுவனங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, அதற்கான சட்ட திருத்தங்களும் தமிழக சட்டமன்றத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

“தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன. எனவே தனியார் பால் அருந்துவதை பொதுமக்கள் யோசிக்க வேண்டும்’’ என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எனவே இனியாவது மக்கள் உயிரோடு விளையாடும் கலப்பட பால் நிறுவனங்களை கண்டறிய உடனடியாக “அதிரடிப்படை நிபுணர் குழு”வை அமைப்பதோடு, பால் கலப்படம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசின் சார்பில் “சிறப்பு இணையதளம்’’ தொடங்க வேண்டும்.

பாலில் கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க “பால் கலப்பட தடைச் சட்டம்’’ இயற்றி அதில் குற்றம் நிருபிக்கப்பட்டால் பால் நிறுவனங்களின் உரிமையாளர்கள், உயரதிகாரிகளுக்கு “ஆயுள்தண்டனை வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்’’ என்று தமிழக அரசையும், முதல்வரையும், பால்வளத்துறை அமைச்சரையும் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.