நாகர்கோவில்:
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மனைவி டிரிட்ஜிக் (வயது 59). இன்று காலை கணவன்-மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பீச் ரோடு சந்திப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த டிரிட்ஜிக், மினி பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கினார்.
10 அடி தூரத்துக்கு டிரிட்ஜிக்கை மினி பஸ் இழுத்துச் சென்றது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டு அலறினார்கள். இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். டிரிட்ஜிக் தலை, கை என பல இடங்களில் காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி அவரது கணவர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி டிரிட்ஜிக் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.